புகழ் பெற்ற ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய ‘பேப்பர்’ என்ற மொபைல் அப்ளிகேஷனுக்கான விளம்பரம் இப்படித் தொடங்குகிறது, ‘கதை முக்கியம்தான், அதை எப்படிச் சொல்கிறோம் என்பதும் முக்கியம்!’
இந்த அப்ளிகேஷன் ஃபேஸ்புக் டைம்லைனுடன் செய்திகளைச் சேர்த்துத் தருகிறது. Tiled Layout, Gesture Based User Interface போன்ற நவீன வசதிகளால், இவற்றை வாசிப்பதும் சுலபம், பிறருடன் பகிர்ந்துகொள்வதும் எளிது.
அந்தவிதத்தில் ஃபேஸ்புக் பேப்பர் நேரடியாக ஃப்ளிப்போர்ட் உடன் போட்டியிடுகிறது. இந்த இரண்டில் எது சிறந்தது?
வடிவமைப்பு: இரண்டுமே Tiled Layout பயன்படுத்துகின்றன, செய்திகள் வலைபோலக் காட்டப்படுகின்றன. ஃப்ளிப்போர்டில் விஷயத்துக்கு முதல் இடம், பேப்பரில் ஃபேஸ்புக் நண்பர்கள், டைம்லைனுக்குதான் முதல் இடம்!
Gestures: ஃப்ளிப்போர்டில் ஒரு வகை Gesture (Flip to flip) முக்கியத்துவம் பெறுகிறது. பேப்பரில் tap, swipe, pinch, drag என்று பல Gestures உண்டு. இவை கொஞ்சம் சிக்கலானவை, ஆனால் பயன்படுத்த எளிதாகவே உள்ளன. சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தில் பேப்பர் ஜெயிக்கிறது!
செய்திகள்: ஃப்ளிப்போர்ட் நாம் விரும்பும் செய்திகளைச் சேகரிக்கிறது, பேப்பர் நாம் அறியாத செய்திகளையும் தேடித் தொகுத்துத் தருகிறது. இவற்றை நாம் விரும்பும் வகையில் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒரே வித்தியாசம், பேப்பரில் நாம் அதிகபட்சம் 10 பிரிவுகளில்தான் விவரங்களைத் தொகுக்க இயலும். ஃப்ளிப்போர்டில் அந்தக் கட்டுப்பாடு இல்லை!
கட்டுப்பாடு: ஃப்ளிப்போர்டில் நாம் என்ன பார்க்க விரும்புகிறோம், என்ன பார்க்க விரும்பவில்லை என்பது நம் தீர்மானம்தான். ஆனால் பேப்பரில் அதை ஃபேஸ்புக் கட்டுப்படுத்தும்.
சோஷியல் அம்சங்கள்: இவை இரண்டிலும் உள்ளன. ஃப்ளிப்போர்டில் இவை பின்னணியில் இயங்க, பேப்பரில் ஃபேஸ்புக் முதன்மை பெறுகிறது. ஃபேஸ்புக்கில் செய்கிற எல்லாவற்றையும் இங்கேயும் செய்யலாம். ஆனால் ட்விட்டர், டம்ப்ள்ர், இன்ஸ்டாக்ராம், லிங்க்ட்இன் போன்ற மற்ற சோஷியல் நெட்வொர்க்குகளில் அவற்றைப் பகிர வாய்ப்பில்லை, அது ஃப்ளிப்போர்டின் சிறப்பம்சமாக உள்ளது.
சுருக்கமாகச் சொன்னால், இவை இரண்டுக்கும் ஒற்றுமையும் உண்டு, பல வேற்றுமைகளும் உண்டு. இவை நேரடிப் போட்டி அல்ல. ஃப்ளிப்போர்ட் செய்திகளைச் சேகரிக்கப் பயன்படும், அதேநேரம் பேப்பர் உங்களுடைய ஃபேஸ்புக் அனுபவத்தை மேம்படுத்த உதவும்!
ஃப்ளிப்போர்ட் இணையம், ஐஃபோன், ஐபேட், ஆண்ட்ராய்ட், விண்டோஸ் ஃபோன், ப்ளாக்பெர்ரி, கிண்டில் ஃபயர், நூக் என எல்லாக் கருவிகளிலும் இயங்கும், பேப்பர் தற்போது ஐஃபோனில்மட்டுமே கிடைக்கிறது!
