மைக்ரோப்ளாகிங் நிறுவனமான ட்விட்டர் தனது ப்ரொஃபைல் பக்கத்தை ஃபேஸ்புக், கூகுள்+ பாணியில் மாற்றி அமைக்கிறது.
இந்த வசதி ஏற்கெனவே சில ட்விட்டர் பயனாளர்களுக்குக் கிடைத்துவிட்டது. அவர்களுடைய ப்ரொஃபைல் பக்கத்தில் புகைப்படம், அறிமுகக் குறிப்பு ஆகியவை இடப்பக்கம் நகர்த்தப்பட்டுள்ளன. அவர்களது Header புகைப்படம் நன்கு தெளிவாகக் காண்பிக்கப்படுகிறது. ட்வீட்கள், புகைப்படங்கள், Content Cards போன்ற எல்லாமே முன்பைவிட மிகவும் வித்தியாசமாகக் காண்பிக்கப்படுகின்றன.
ட்விட்டர் இதுபோல் சிறு மாற்றங்களைச் செய்து பரிசோதிப்பதும், பின்னர் அவற்றை எல்லாருக்கும் வெளியிடுவதும் புதிதல்ல. அந்தவிதத்தில், இந்த வசதிகள் விரைவில் அனைத்து ட்விட்டர் பயனாளர்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
Header புகைப்படத்துக்குக் கீழே, ஒருவர் எழுதியுள்ள மொத்த ட்வீட்கள், ஃபோட்டோக்கள், வீடியோக்கள், அவர் பின்பற்றுவோர், அவரைப் பின்பற்றுவோர், அவர் விரும்பிய பதிவுகள், பட்டியல்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன. அவர் எழுதிய ட்வீட்கள், அவருக்கு வந்த பதில்கள் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் வசதியும் உண்டு.
இந்த வசதி உள்ள ட்விட்டர் பயனாளர்கள், மற்றவர்களுடைய ப்ரொஃபைல் பக்கங்களையும் இதேபோல் பார்க்கலாம். ஆனால் இந்த மாற்றங்களைப்பற்றி ட்விட்டரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை
