வன்தட்டு நிலை நினைவகம் (வநிநி, hard disk drive, HDD) என்பது கணினியில் உள்ள நிலையான நினைவகம்.
குறிப்பாக மேசைக்கணினி, மடிக்கணினி, குறுமடிக்கணினி (net top), போன்ற கணினிகளில் இயக்குதள மென்பொருள் முதல் பல பயன்பாட்டு நிரல்கள் கொண்ட மென்பொருள்கள் வரை பலவற்றையும் நிலையாக சேமித்து வைக்கும் நினைவகம்.
கணினியை இயக்கும் மின்னாற்றலை நீக்கினாலும், தகவல் அழிந்து போகாமல் நினைவில் வைத்திருப்பதால் இதனை அழியா நினைவகம் (non-volatile memory) என்றும், நிலை நினைவகம் என்றும் கூறுவர்.
இந்த வன்தட்டு நிலை நினைவகத்தில் (வநிநி) காந்தப் பூச்சுடைய வட்டமான தட்டுகளில் (வட்டைகளில்), 0,1 என்னும் இரும முறையில் தரவுகள் குறியேற்றப்பட்டு பதிவு செய்யப்பட்டிருக்கும்.
இத்தட்டுகள் மணித்துளிக்கு பல்லாயிரக்கணக்கான முறை சுழலவல்லது, எனவே எண்ம தரவுகளை இந்த காந்தப்பூச்சுள்ள வட்டைகளில் முறைப்படி விரைவாகப் பதிய வைக்கவும். ஏற்கனவே பதிந்துள்ளதைப் படிக்கவும் முடியும்.
வன்தட்டு நிலை நினைவகமத்தை (வநிநி) முதன்முதலாக, தனிமனிதப் பயன்பாட்டுக்கான மேசைக்கணினிகள் தோன்றும் முன்னரே 1956 இல் ஐபிஎம் (IBM) நிறுவனம் உருவாக்கிப் பயன்படுத்தியது . ஆனால் இன்று இத்தகைய வன்தட்டு நிலை நினைவகங்கள் கணினிகள் மட்டுமன்றி, எண்ம நிகழ்பட/ஒளிப்படக் கருவி (digital video recorder) முதல் செல்பேசிகள் (அலைபேசி) வரை பல எண்மக் கருவிகளும், அறிவியல் கருவிகளிலும் பயன்படுகின்றது.
வன்தட்டு நிலை நினைவகக் (வநிநி) கொள்ளளவு வளர்ச்சியை கணக்கிட்டால்,
1980இல் 0.005 கிகா பைட் (5 மெகா பைட்) அளவு ஆக இருந்தது
இன்று 1000 கிகா பைட் (= ஒரு டெரா பைட்) அளவகாக வளர்ந்துள்ளது.
இந்த 28 ஆண்டுகளில் 100,000 மடங்குக்கும் மேல் வளர்ச்சி அடைந்துள்ளது.